“தலைமையின் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்”-எடியூரப்பா
கர்நாடகாவில் ஆட்சியமைப்பது குறித்து கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்று அங்கு மூத்த தலைவர்களிடம் எடியூரப்பா ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்து கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். மேலிட உத்தரவு வந்தவுடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், பின்னர் ஆளுநரிடம் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக சட்டப்பேரவையில் 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். அதேசமயம், தமது ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரசை குறைகூற முடியாது என்றும் அக்கட்சியுடன் கூட்டணி தொடரும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.