‘இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது; ஆனால்..’ - கொரோனா நிபுணர் குழு தலைவர்

‘இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது; ஆனால்..’ - கொரோனா நிபுணர் குழு தலைவர்
‘இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது; ஆனால்..’ - கொரோனா நிபுணர் குழு தலைவர்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று மத்திய அரசின் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் அரோரா தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவால் நாள்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்புகளை பதிவுசெய்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த மாதம் 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதன்முதலாக கால்பதித்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மறுபுறம் கொரோனா பாதிப்புகளும் அதிகளவில் பதிவாகி வருகின்றன. ஏற்கனவே, ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் 3-வது அலை உருவாகலாம் என்றும், அதன் உச்சம் பிப்ரவரி மாதத்தில் இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொரோனா 3-வது அலை இந்தியாவில் உருவாகியுள்ளது.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் இந்த 3-வது அலை குறித்து நாம் பயப்படதேவையில்லை. ஏனெனில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நேற்றிலிருந்து 15 வயது முதல் 18 வயது சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

கடந்த 6 மாதங்கங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாட்டின் சுகாதாரத்துறை வலிமையடைந்துள்ளது. மிகவும் கொடூரமான ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிகளவில் பரவும் வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் டெல்லி போன்ற பெருநகரங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இன்றைய கணக்கீட்டின்படி, 1,892 ஒமைக்ரான் பாதிப்புகள், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உறுதியாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 568 பாதிப்புகளும், டெல்லியில் 382 பாதிப்புகளும், அதற்கு அடுத்ததாக கேரளாவில் 174 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்த பாதிப்பில் 766 பேர் குணமடைந்துள்ளனர் அல்லது வேறு நாடு சென்றுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com