“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி
கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் சகிப்புத் தன்மை இல்லை எனவும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேசிய ராகுல், தொழிலாளர் முகாமுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுவதாகவும் ஒரு கொள்கைதான் சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று நம்பும் வரை இந்தியாவை ஒருபோதும் வழிநடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக இந்திய மக்களிடையே கோபத்தையும் வெறுப்பையும் பார்க்கிறேன் எனவும் சகிப்புத்தன்மை இல்லை எனவும் வேதனை தெரிவித்தார். இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம் எனவும் மேலும் விளையாட்டுத்துறையில் இந்தியா முதலிடம் வகித்தாலும் பசியில் மிகப்பெரிய சவாலை இந்தியா எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை நாங்கள் விரும்புவதில்லை எனவும் வரும் தேர்தல் கண்டிப்பாக ஒரு சவாலாக அமையும் எனவும் ராகுல் தெரிவித்தார்.
வேலையில்லா திண்டாட்டத்தை மட்டும் அல்ல சீனாவையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு காட்ட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.