
வயநாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் (766) இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை கேரளாவை மைசூருடன் இணைக்கிறது. ஏற்கெனவே இரவு நேரங்களில் 9 மணி நேரம் தடை உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தடை அமலில் உள்ளது.
இரவு நேரங்களில் வனவிலங்குகள் பாதிப்படையாமல் இருப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலைக்கு மாற்றாக குட்டா கோனிகுப்பா சாலை போடப்பட்டுள்ளதால், இந்தச் சாலையை நிரந்தரமாக மூடினால் என்ன என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது, பத்தேரி முதல் மைசூர் இடையிலான தூரம் 98 கிமீ. ஆனால், இந்தச் சாலைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு மாற்று சாலையில் சென்றால் 217கிமீ செல்ல வேண்டியிருக்கும்.
இது, வயநாடு மக்களை குறிப்பாக பத்தேரி நகரவாசிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலை மூடப்பட்டால் பயண நேரம் அதிகரிக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். விவசாயிகளால் தங்களது விவசாய பொருட்களை உரிய நேரத்தில் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுவர். அதேபோல், மாணவர்களும் இந்தச் சாலையை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளதால் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்படலாம் எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் பயணிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி வயநாடு பகுதி இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது. உள்ளூர் மக்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ், இடதுசாரிகளின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இளைஞர் லீக் மற்றும் யுவ மோர்சா உள்ளிட்ட இளைஞர் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் பலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும், சாலையை பயன்படுத்துவதையும் தடை செய்யக் கூடாது என உள்ளூர்வாசிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போராட்டக்காரர்களை நாளை மறுநாள் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளார். இதுகுறித்து கடந்த செப்டம்பர் 29ம் தேதி ராகுல் தன்னுடைய ட்விட்டரில், “செப்டம்பர் 25ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் விதிக்கப்பட்ட 9 மணி நேர தடையால் கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசால் அமைக்கப்பட்ட வயநாடு எம்.எல்.ஏ ஐசி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் முறையிட்டனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த விவகாரம் தொடர்பாக ஜவடேகரிடம் பேசியுள்ளார்.