26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பும் இடுக்கி அணை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
ஆசியாவிலேயே முதல் “ஆர்ச்” வடிவிலான அணை என்ற பெருமை கொண்ட இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடுக்கி தாலுகாவிற்கு உட்பட்ட செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது இடுக்கி அணை.72 டி.எம்.சி., நீர் கொள்ளவு கொண்ட இடுக்கி அணை கேரள மின்சார வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. அணை மொத்த நீர்மட்டம் 2,403 அடி என கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு இடுக்கி அணை நிரம்பியதால் அணை நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையில் அதிகப்பட்சமாக 2,400 அடி வரை தண்ணீர் தேக்கலாம். அணையின் தற்போதைய நீர்மட்டம் 2,396 அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை துவங்கும். நீர்மட்டம் 2,397, 2,398, 2399 என உயரும் போது முறையே மூன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என அணையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கேரள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதங்களில் இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக திருவனந்தபுரம் வானிலை மையம் முன்னறிவிப்புசெய்துள்ளது. எனவே, இடுக்கி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அணைநீர்மட்டம் 2,400 அடிவரை உயர்வதற்காக காத்திருக்காமல், முன் கூட்டியே அணையை திறக்க அரசுத்தரப்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இடுக்கி அணையின் தாழ்வாரப்பகுதிகளான செறுதோணி, வாழத்தோப்பு, மரியாபுரம், கஞ்சிக்குழி வழியாக எர்ணாகுளம் மாவட்டம் சென்று அங்கிருந்து அரபிக்கடலில் கலக்கும்.
26 ஆண்டுகளுக்குப் பின் இடுக்கி அணை திறக்கப்பட உள்ளதால், பெரியாற்றங்கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க இடுக்கி, எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகங்கள் முன்னேற்படுகளை செய்து வருகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளகட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.