பாஜகவுக்கு ஆதரவளிக்காததால் என்னை திகார் சிறைக்கு அனுப்பினார்கள்: டி.கே.சிவக்குமார்

பாஜகவுக்கு ஆதரவளிக்காததால் என்னை திகார் சிறைக்கு அனுப்பினார்கள்: டி.கே.சிவக்குமார்
பாஜகவுக்கு ஆதரவளிக்காததால் என்னை திகார் சிறைக்கு அனுப்பினார்கள்: டி.கே.சிவக்குமார்

நான் பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை; அவர்களுடன் செல்லவில்லை என்பதால்தான் என்னை திகார் சிறைக்கு அனுப்பினார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டி.கே.சிவக்குமார் திகார் சிறைக்கு சென்றது ஏன் என பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சிவக்குமார், " நான் பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை, பாஜகவுடன் வரவில்லை என்பதால்தான் திகார் சிறைக்கு சென்றேன். பாஜகதான் என்னை சிறைக்கு அனுப்பியது. கர்நாடகாவில் உள்ள தற்போதைய பாஜக அரசுதான் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி " என்று தெரிவித்தார்.

முன்னதாக, பணமோசடி வழக்கில் 2019 செப்டம்பர் 3 ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தால்  சிவக்குமார் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து அந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம், ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான டெண்டர் தொகையில் 30 சதவீதம் கமிஷன்  மற்றும் கடன் கடிதம் அளிக்க 5-6 சதவீதம் கமிஷன்  கேட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தனர். இதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com