சிக்னல் குறைபாடால் ஏற்கனவே நடக்கவிருந்த விபத்து: 3 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம்!

ரயில்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருப்பது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து, ரயில் சிக்னல்
ஒடிசா ரயில் விபத்து, ரயில் சிக்னல்twitter

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ”சிக்னல் தொடர்பான மின்னணு அமைப்பில் ஏற்பட்ட மாற்றம்தான் விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது” என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, 12649 எண் கொண்ட சம்பார்க் கிராந்தி விரைவு ரயில், சிக்னல் கோளாறை சந்தித்தது. அது, சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. அப்போது, லோகோ பைலட்டின் சமயோசித புத்தி காரணமாக தவறான பாதையில் (டவுன் லைன்) நுழைவதற்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டதுடன் மோதுவதற்கான நிலையும் தவிர்க்கப்பட்டது.

எஸ்.எம்.எஸ். பேனலில் உள்ள பாதையின் சரியான கண்காணிப்புடன் சிக்னல்களில் ரயில் ஓடத் தொடங்கிய பிறகு, அதன் பாதையில் ஏற்படும் மாற்றங்களினால் கடுமையான குறைபாடுகள் நிலவும் சூழல் உள்ளது. இது இன்டர்லாக்கிங்கின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது. ஆகையால், சிக்னல் பராமரிப்பு முறையை உடனடியாகக் கண்காணித்து சரி செய்யாவிட்டால், அது மீண்டும் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும்” என கடந்த 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேநேரத்தில், ”ரயில்வே பாதுகாப்பை பராமரிப்பதில் ஸ்டேஷன் மாஸ்டர் பதவி முக்கியமானது. அவர்கள் 12 மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்யப்படுகிறார்கள். பாதுகாப்பைப் பேணுவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஸ்டேஷன் மாஸ்டர் சக்கரங்கள் முதல் ரயில் கடந்து செல்லும் ஒலி வரை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும், ஏதேனும் முறைகேடுகளைக் கண்டறிய வேண்டும். அப்படி ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஓவர் டூட்டியுடன் வேலை செய்தாலும் தண்டவாளங்களைப் பராமரிக்கும் கேங்கேன்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், ரயில்வே பாதுகாப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் விளக்கக்காட்சிகள் புறக்கணிக்கப்படுகிரது. பாதுகாப்பு குறித்த விளக்கக்காட்சியை வழங்க ஒரே ஒரு மண்டலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ரயில்களை தொடங்கவும் வருவாயை அதிகரிக்கவும் தொடர்பான விவாதங்கள் அனுமதிக்கப்படுகிறது.

அதுபோல் சமீபகாலங்களில் தடம் புரண்ட சரக்கு ரயில்கள் பற்றியும் லோகோ பைலட்களின் இறப்பு பற்றியும் கேள்வி எழுப்பப்படவில்லை. மேலும், கவச் தொழில்நுட்பம் இன்னும் மண்டலங்கள் முழுவதும் செயல்படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விபத்துகள் அதிகரிப்பதற்கு, இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதே முக்கியக் காரணம்” என ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com