11 வருட சேவைக்கு மரியாதை.. பிரிவு உபசார விழாவுடன் ஓய்வுபெற்ற மோப்ப நாய்!
மகாராஷ்டிராவில் மோப்ப நாய் ஓய்வு பெற்றதையடுத்து, அதற்கு காவல்துறையினர் நெகிழ்ச்சியான பிரிவு உபசார விழா நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகர காவல்துறையின் பணியாற்றிய 'ஸ்னிஃபர் ஸ்பைக்' என்ற மோப்ப நாய், இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது. இந்த மோப்ப நாய், வெடிகுண்டுகளை கண்டறிதல் மற்றும் அகற்றல் பிரிவில் 11 ஆண்டுகள் சேவை செய்துள்ளது. தற்போது ஸ்பைக் ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, அதற்கு நாசிக் காவல்துறையினர் நெகிழ்ச்சியான பிரிவு உபசார விழா நடத்தியுள்ளனர்.
ஸ்பைக்கிற்கு மாலை அணிவித்து, ரோஜாக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட காரின் வெளிப்பகுதியில் அமரவைத்து, போலீஸார் காரை ஓட்டினர். அப்போது காவல்துறையினர் இருபுறமும் நின்று கைகளைத் தட்டி, ஸ்பைக்கிற்கு மரியாதை செலுத்தினர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஸ்பைக் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக அதற்கு வணக்கம் செலுத்துவதாக பதிவிட்டுள்ளார்.