விஐடி போபாலில் வெடித்த போராட்டம்.. ஒன்றுகூடிய 4,000 மாணவர்கள்.. பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
போபாலில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். என்ன விவரம் என பார்ப்போம்.
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் இந்தூர்-போபால் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது விஐடி பல்கலைக்கழகம். அங்கு கிட்டத்தட்ட 4,000 மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தி, வளாகத்தில் உள்ள பல வாகனங்களை எரித்ததை அடுத்து வன்முறை வெடித்துள்ளது. முன்னதாக, மாணவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டனர். சுகாதாரக் குறைபாடு மற்றும் அழுக்கு நீர் காரணமாகவே பெரிய அளவில் மஞ்சள் காமாலை பரவியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, போராட்டங்கள் வெடித்தன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விடுதிகளுக்கு அருகில் மாணவர்கள் கூடி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கியபோது போராட்டம் தொடங்கியது. பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை மாணவர்கள் தீ வைத்ததை அடுத்து நிலைமை மோசமடைந்தது. மேலும், இரண்டு கார்கள் மற்றும் பல பைக்குகள் தீக்கிரையாக்கப்பட்டன.
உணவுத் தரத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களாக மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதிகளில் தண்ணீரின் தரம் மோசமாக இருந்ததால், பல நாட்களுக்கு பாட்டில் தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் விஐடி மாணவர்கள் கூறி இருக்கின்றனர். இதுவரை, பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நோய் அல்லது வன்முறை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக, கல்லூரி நவம்பர் 30 ஆம் தேதி வரை மூடப்படும். பல மாணவர்கள் ஏற்கனவே வீட்டிற்குச் சென்றுவிட்டனர். நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். மேலும் அவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் தீபக் சுக்லா தெரிவித்தார்.

