புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை

புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை
புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் பின்னணியை கண்டறிய அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட உள்ளது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்ட நிலையே நிலவியது. இந்த தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் பின்னணியை கண்டறிய அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட உள்ளது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் போது சிம் கார்டு இல்லாத அதிநவீன மொபைல் ஃபோன் தகவல் தொடர்பை கையாண்டுள்ளனர். இந்த சிம் கார்டுகள் 'விர்ச்சுவல் சிம்' என்று அழைக்கப்படுகின்றன. கணினி வழியாக தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு சிம் கார்டு தேவைப்படாது. இதுவே 'விர்ச்சுவல் சிம்' ஆகும். 

இந்த வகை 'விர்ச்சுவல் சிம்' மூலமே புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் இவை அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்டதையும் இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இதன் பின்னணியை ஆராய்வது மூலம் இந்த சேவைக்கான பணம் வழங்கியது யார் என்பது உள்ளிட்ட ஆதார பூர்வ தகவல்கள் கிடைக்க கூடும் அரசு நம்புகிறது.

விர்ச்சுவல் சிம் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் புல்வாமா தாக்குதலின் விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டும் எனவும் புலனாய்வு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com