டெல்லி தெருக்களில் கல்லி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி எனும் சிறுவன், இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தது வரையிலான அவரது வெற்றிப் பயணம் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
’வின்னிங் லைக் விராட்: திங் அண்ட் சக்ஸீட் லைக் கோலி’ என்ற விராட் கோலி குறித்த இந்த புத்தகத்தை அபிருப் பட்டாச்சார்யா என்பவர் எழுதியுள்ளார். அதில், தனது அறிமுக போட்டிகளில் 10,12 மற்றும் 19 என ரன் குவித்த விராட் கோலி, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தது எப்படி என்பது குறித்தும் அந்த புத்தகத்தில் விரிவாக அலசப்பட்டுள்ளது. பேட்டிங் ஃபார்ம் மட்டுமல்லாது பிட்னெஸையும் சீராக பராமரித்து வரும் விராத் கோலி, குடும்பத்தினருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்தும் ஆசிரியர் புத்தகத்தில் விவரிக்க முயன்றிருக்கிறார்.
புத்தகம் தொடர்பாக பேசிய அபிருப் பட்டாச்சார்யா, சச்சினுக்கு இணையான மக்கள் புகழ்பெற்றிருப்பவராக விராட் கோலியை அடையாளப்படுத்தலாம். அவரைப் போலவே தனது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மாவுடனான உறவை இன்றும் விராட் பேணிப் பாதுகாக்கிறார். அதேபோல விளையாட்டுக்குக் கொடுக்கும் அதேஅளவு முக்கியத்துவத்தை தனது குடும்பத்தினருக்கும் அளிக்க விராட் தவறியதில்லை. அவரது வெற்றி என்பது வெறும் அதிர்ஷடத்தால் மட்டும் கிட்டிவிடவில்லை. அதற்கான விராட்டின் முயற்சியும், உழைப்பும் அளப்பரியது என்கிறார்.