பள்ளிச் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர் - வைரலாகும் வீடியோ
பெங்களூருவில் பள்ளிச் சிறுவனுக்கு கமிஷனர் சல்யூட் அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாகவே காவல்துறையினர் மீது மரியாதைக்கு பதிலாக மக்களுக்கு அச்ச உணர்வு இருக்கும் என்ற கருத்து உள்ளது. ஆனால், சில காவல் துறையினர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் சார்ந்த துறை மீதே மதிப்பை கூட்டி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரு கமிஷ்னர் சுனீல் குமார் மருத்துவமனை வளாகம் ஒன்றில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு முன்பாக பள்ளிச் சிறுவன் ஒருவர் சீருடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். கமிஷ்னரை பார்த்தவுடன் சிறுவன் அவருக்கு மாரியாதை செய்வதற்காக சல்யூட் செய்தான். அதற்கு கமிஷனரும் சிறுவனுக்கு சல்யூட் செய்தார். இது அங்கிருந்த காமிராவில் பதிவாகியுள்ளது.
பள்ளிச் சிறுவனுக்கு கமிஷனர் சல்யூட் செய்த வீடியோ காட்சியை பெங்களூரு நகர போலீசார் பதிவு செய்திருந்தார்கள். அந்த பதிவில், ஒரு சீருடை இன்னொரு சீருடைக்கு மதிப்பு அளிப்பது ஒழுக்கத்தின் மதிப்பை காட்டுகிறது என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 1500 பேருக்கு மேல் வீடியோவை ஷேர் செய்துள்ளார்கள். 80 ஆயிரம் பேர் வீடியோவை பார்த்துள்ளார்கள்.