சைடு மிரரை பார்த்து முகச்சவரம் - வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வேலை நேரத்திற்கு இடைப்பட்ட ஓய்வில் நின்றுகொண்டே முகச்சவரம் செய்துகொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனா என்ற வார்த்தையை உலக நாடுகள் உச்சரிக்கத் தொடங்கிய நாள் முதலே அரசுகள் பரபரப்பாகின. எளிதில் பரவும் தொற்று நோய் என்பதால் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எனப் பலரும் தீவிரமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இரவு பகல் பாராமல் அவர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களை முன் கள வீரர்கள் என அரசு பெருமையாக அழைக்கிறது. மக்களுக்கான தன்னலம் பாராது உழைக்கும் இந்த முன் கள வீரர்களின் பணிகளை மக்கள் போற்றி வரும் வேளையில் ஒரு புகைப்படம் முன் கள வீரர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த கொரோனா நோயாளி ஒருவரை மயானத்தில் இறக்கி வைத்துவிட்டு இறுதிச்சடங்கு நேரத்திற்குள் தனக்கு முகச்சவரம் செய்துகொள்கிறார்.
பாதுகாப்பு உடையுடன் நின்றுகொண்டு ஆம்புலன்ஸ் கண்ணாடியைப் பார்த்து முகச்சவரம் செய்துகொள்ளும் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புகைப்படக் கலைஞர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதனைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். முன் கள வீரர்களின் உழைப்பை உணர்த்தும் விதமாக இந்தப் புகைப்படம் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்