பழம் எனக்கே சொந்தம்: துப்பாக்கிச் சூடு வரை போன மாம்பழச் சண்டை!
’திருவிளையாடல்’ படத்தில் ஞானப்பழத்துக்காக விநாயகரும் முருகனும் சண்டையிட்டுக் கொண்ட கதை தெரிந்திருக்கும். அதே போல இப்போதும் நடந்திருக்கிறது ஒரு பெரும் சண்டை. இந்தச் சண்டை, துப்பாக்கிச்சூடு வரை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, டோம்பிவிலியில் உள்ள பங்களா ஒன்றில் வசித்துவருபவர் கண்பத் தாமு. இவர் வீட்டுக்கு எதிரில் உள்ள மற்றொரு பங்களாவில் வசிக்கிறார் இவரது அண்ணன், ஹிராமன் தாமு. இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணைத் தோட்டம், தானே அருகே இருக்கிறது. இங்கு சென்ற ஹிராமன் கொத்துத் கொத்தாகக் கிடந்த மாங்காய்களைப் பார்த்ததும் பறித்து வந்தார் வீட்டுக்கு. இதைக் கேள்விபட்ட தம்பி கண்பத் மறுநாள் தானும் தோட்டத்துக்குப் போனார். காய்த்துத் தொங்கும் மாம்பழத்தைக் கண்டதும் எச்சில் ஊறியது. மாம்பழங்களை பறித்து இரண்டு மூட்டையில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதைக் கண்ட அண்ணன் ‘எங்கிட்ட சொல்லாம, எப்படி நீ இதைப் பறிச்சுட்டு வரலாம்’ என சண்டைப் போட்டுள்ளார். பின்னர் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கண்பத்தையும் அவர் மனைவியையும் தாக்கியுள்ளார். தனது மகன் ஜெயேஷை அழைத்து துப்பாக்கியால் சுடச் சொன்னார். அவர் கண்பத்தை நோக்கிச் சுட்டார். குறி தப்பியதால் கண்பத் பிழைத்தார்.
இதையடுத்து போலீசில் புகார் செய்தார் கண்பத். அவர்கள் விசாரணை நடத்தி ஹிராமனையும் அவர் மகன் ஜெயேஷை கைது செய்துள்ளனர்.