டெல்லி: படுக்கைக்காக காத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு; மருத்துவமனையில் உறவினர்கள் வன்முறை!
டெல்லி தனியார் மருத்துவமனையில் படுக்கைக்கு காத்திருந்த 62 வயது மூதாட்டிக்கு படுக்கை கிடைக்காமல் உயிரிழந்ததால் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் மருத்துவர்களும் செவிலியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ஊழியர்கள் திருப்பி அவர்களை தாக்கினர்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைக்கான படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று தனியார் மருத்துவமனை ஒன்றில் படுக்கைக்கு காத்திருந்த 62 வயது மூதாட்டி ஒருவர் படுக்கை கிடைக்காமல் உயிரிழந்தார்.
இதனால், மூதாட்டியின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் பல மருத்துவர்களுக்கும் நர்ஸ்களுக்கும் படுகாயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கம்பு கொண்டு அவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை திருப்பி தாக்கி வெளியே அப்புறப்படுத்தினர்.