பாடகரின் அப்பாவை தாக்கிய வினோத் காம்ப்ளி மனைவி!
பாலிவுட் பாடகர் அங்கித் திவாரியின் அப்பாவை தாக்கியதாக வினோத் காம்ப்ளி மற்றும் அவர் மனைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை கோரேகானில் உள்ள மால் ஒன்றுக்கு நேற்று தனது குடும்பத்துடன் சென்றிருந்தார் ராஜேந்திர குமார் திவாரி (57). இவர் சினிமா பாடகர் அங்கித் திவாரியின் தந்தை. பேரக் குழந்தையுடன் சென்றுகொண்டிருந்தபோது அவரது கன்னத்தில் ஒரு பெண் அறைந்துவிட்டு ஏதோ திட்டியபடி சென்றார். இதை எதிர்பார்க்காத அவர், அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மகன் அங்கித்திடம் சொன்னார். அவர் தந்தையுடன் அந்தப் பெண்ணின் அருகில் சென்றார். அப்போதுதான், அது முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா என்பது தெரிய வந்தது.
பிரச்னையை பேசி முடிக்கத்தான் சென்றாராம் அங்கித். ஆனால், ஆண்ட்ரியா, ‘அவர் என்னை தவறான நோக்கத்தோடு தொட்டார்’ என்று கூறினார். பின்னர் அவரது பாதுகாவலர்கள் அங்கித்தைத் தாக்கி காயப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து பங்குர் நகர் போலீசில் ராஜேந்திர குமார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வினோத் காம்ப்ளி ட்விட்டரில், ’தவறான எண்ணத்துடன் என் மனைவியை தொட்டுள்ளார். அதுபற்றி கேட்டால், மகனை அழைத்து வந்து பிரச்னை செய்கிறார்கள். பெண் பாதுகாப்பு மீண்டும் ஒரு முறை கேள்விக்குறியாகி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.