தண்ணீர் திருட்டு: இரவு பகலாக குளத்தைப் பாதுகாக்கும் கிராமம்!
மகாராஷ்டிர மாநில கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை, 24 மணி நேரமும், மக்கள் காவல் காக்கின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது, தால்வாடா கிராமம். இந்த ஊரில் உள்ள குளத்துத் தண்ணீரைத்தான் குடிப்பதற் கும் விவசாயத்துக்கும் இந்த கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்கம் பக்கத்து கிராமத்தினர், இந்தக் குளத்தில் திருட்டுத் தனமாக குழாய்கள் பதித்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்த விஷயம் தெரிய வந்ததும் கொதித்து எழுந்த கிராமத்தினர், ‘எங்களுக்கு இருக்கறதே ஒரே குளம். அந்த தண்ணியையும் திருட்டுத்தனமா எடுத்துட்டா, நாங்க என்ன செய்ய?’ என்று குரல் கொடுத்தனர். அதோடு இந்த தண்ணீர் திருட்டுப் பற்றி போலீஸ், தாசில்தார், மாவட்ட மாஜிஸ்தி ரேட் ஆகியோருக்கும் மனு கொடுத்தனர்.
வழக்கம் போல அவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தண்ணீரும் குறைந்து வந்தது. வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவும் குறைந்துவிட்டது. இதையடுத்து 4,500 பேரை கொண்ட இந்த கிராமத்தினர் ஒரு முடிவெடுத்தனர். அதாவது தாங்களாகவே ஷிப்ட் முறையி ல் இரவு பகலாக குளத்தைக் காப்பது என்கிற முடிவுதான் அது.
அதன்படி கடந்த சில நாட்களாக இந்தக் குளத்தை கூட்டம் கூட்டமாக இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
இதுபற்றி, கிராம தலைவர் பாவுசாஹேப் மகர் கூறும்போது, ’அருகில் உள்ள கிராமத்தினர் தண்ணீரை திருடுவதால், குளத்தின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் முப்பது நாள் திருட்டைத் தொடர்ந்தால் குளத்தின் மொத்த தண்ணீரும் காலியாகிவிடும்.
நாங்களும் எங்கள் கால்நடைகளும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்க வேண்டிவரும்’ என்றார்.