“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல்களும் வருகின்ற அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சி தலைவர்களும் வழக்கம்போல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். காரணம் கேட்டால் நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நாடு சுதந்திரம் ஆகி 72 ஆண்டுகள் ஆகியும் தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி இல்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள ‘மனிபேலி’கிராமம்தான் அது. இந்த கிரமாமத்தில் இருப்பது மொத்தமே 135 வாக்காளர்கள்தான்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் மாங்கபே-இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “சாலை வசதி மற்றும் மின்சார வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்காக நீண்ட காலமாகவே போராடி வருவதால் தேர்தலை புறக்கணிக்கின்றோம். பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா திட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கு முன்பு 8 கி.மீ தூரம் சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்னும் சாலை தயாராகவில்லை. அரசியல்வாதிகள் மீது நாங்கள் எல்லா நம்பிக்கையும் இழந்துவிட்டோம்” என கூறியுள்ளனர்.
25 வருடங்களுக்கு முன்பு சர்தார் சரோவர் அணை திட்டம் கொண்டு வந்த போது, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முதல் கிராமம் மனிபேலிதான். ஆனால், இன்றுவரை தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என அவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

