“நான் தான் விகாஷ் துபே” ஒரு ரவுடியின் கைதும்.. சூடுபிடித்த அரசியலும்

“நான் தான் விகாஷ் துபே” ஒரு ரவுடியின் கைதும்.. சூடுபிடித்த அரசியலும்
“நான் தான் விகாஷ் துபே” ஒரு ரவுடியின் கைதும்.. சூடுபிடித்த அரசியலும்

இந்தியாவை உலுக்கிய கான்பூர் துப்பாக்கிச் சூடு வழக்கு அதிரடியான திருப்பங்களை சந்தித்து வருகிறது. 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு என்றால் சும்மாவா என்ன ? நிச்சயம் எல்லோராலும் கவனிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும், காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக பேசப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ரவுடி விகாஷ் துபே இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்படியென்றால் நிச்சயம் இது முக்கியமான திருப்பம் தான்.

ஆனால், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு கோயிலில் வந்து எளிய முறையில் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு கைதாகியிருக்கிறார். உண்மையில் இது கைது தானா ? அல்லது சரண்டரா ? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதுகுறித்து நாம் இறுதியில் பார்ப்போம்.

எல்லா முக்கிய ஊடகங்களிலும் இன்று துபேவின் கைது குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு ரவுடியை பற்றிய செய்தி, போலீசாரை சுட்டுக் கொன்றவன் என்பதையெல்லாம் தாண்டி ஒரு அரசியல் சார்புடைய செய்தியாகவே இது சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் விகாஷ் துபேவுக்கும் தங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க முந்திக்கொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே 2017ஆம் ஆண்டு வெளியான ஒரு வாக்குமூலம் தொடர்பான வீடியோவில், தனக்கு இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களை தெரியும் என்று துபே தெரிவித்து இருந்தார். அதனால், அவர் பாஜகவுடன் தொடர்பு படுத்தப்பட்டு பேசப்பட்டார். ஆனால், துபேவின் தயார் அளித்த பேட்டி ஒன்றில், ‘விகாஷ் துபே தற்போது பாஜகவில் இல்லை. அவர் சமாஜ்வாடி கட்சியில் இருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பதறிப்போன சமாஜ்வாடி கட்சி, துபேவுக்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தது. அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது போன் பதிவுகள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியோ சிபிஐ விசாரணை வேண்டும் என்ற அளவிற்கு சென்றுவிட்டார். நிச்சயம் பாஜக உடன் தொடர்பு இருக்கும் என்ற நம்பிக்கை அவர் இந்த கோரிக்கையை கையிலெடுத்திருக்கலாம்.

ரவுடி துபேயின் கைது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளில் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். கைது ஒருபுறம் இருக்க, துபேவின் உதவியாளர் இருவர் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவரது மனைவியும், மகனும் லக்னோவில் கைது செய்யப்பட்டார்கள். இதுபோக, துபேவிடம் 8 மணி நேரம் விசாரணையும் நடந்துள்ளது.

அவர் எப்படி கைதானார் என்பதற்கு மீண்டும் வருவோம். துப்பாக்கிச் சூடு நடைபெற்றது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், ஆனால், அவர் கைது செய்யப்பட்டதோ மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன். எப்படி அவர் அங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தார். என்கவுண்ட்டரில் சுட்டுத்தள்ள நூற்றுக்கணக்கான போலீசார் வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து துபே எப்படி மக்கள் நடமாட்டமுள்ள ஒரு கோயில் வந்தார்.

மகாகல் கோயிலுக்கு வந்த அவர், தரிசனத்திற்காக விஐபி டிக்கெட்டையும் 250 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். அடையாளம் கண்டுகொண்ட கோயிலின் பாதுகாவலர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்படியென்றால் இது கைது அல்ல சரண்டர் தான். வேண்டுமென்றே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு கைதாகி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com