“கடன்களை திரும்ப செலுத்த தயார்” - விஜய் மல்லையா அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிற்கு கடனை பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் பல வங்கிகள் விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் மத்திய அரசு முடக்கியது. இதனிடையே கடன்மோசடி வழக்கில் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்ததால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவே நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே விஜய் மல்லையா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள 5 பக்க அறிக்கையில், பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சருக்கு கடந்த 2016-ஆம் தான் கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் தொடர்பாக தான் இன்றுவரை எந்தப் பதில் கடிதத்தையும் பெறவில்லை எனவும் கூறியுள்ளார். வங்கிகளுக்கு நான் ‘போஸ்டர் பாய்’ ஆகவும், பொது மக்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளேன் எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும் இதில் அரசியல் தலையீடு இருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் விஜய் மல்லையா தனது மவுனத்தை கலைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.