மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்!
அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் மதுபான ஆலைகளின் அதிபராக இருந்த விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக வழக்குகள் உள்ளன. இதற்கிடையே அவர் லண்டனுக்குத் தப்பிச் சென்று அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு, இங்கிலாந்திடம் இந்திய அரசு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இருப்பினும் இங்கிலாந்து நீதிமன்றத்தின் மூலம் மல்லையா, இந்தியா வருவதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் விதிமீறல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் விஜய் மல்லையா ஆஜராகாத நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.