விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்கு எழுந்த எதிர்ப்பு - ட்ரெண்டாகும் BoycottLigerMovie

விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்கு எழுந்த எதிர்ப்பு - ட்ரெண்டாகும் BoycottLigerMovie
விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்கு எழுந்த எதிர்ப்பு - ட்ரெண்டாகும் BoycottLigerMovie

குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ படத்தை புறக்கணிக்குமாறு பாலிவுட் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல குத்துத் சண்டை வீரர் மைக் டைசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

சுனில் காஷ்யப் இசையமைத்துள்ளார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூனைத் சித்திக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத், சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை புறக்கணிக்குமாறு பாலிவுட் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு நெப்போட்டிசம் காரணமாகவே பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டதாக பாலிவுட் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், அண்மைகாலமாகவே இந்தியில் வெளியாகும் திரைப்படங்களை புறக்கணிக்குமாறு ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருவதால், அங்கு வெளியாகும் படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்து வருகின்றன.

ஆனால் அதேநேரத்தில் தென்னிந்தியப் படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்நிலையில், அந்தப் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப் போடு போட்டு வருகின்றன. இந்தியில் நல்ல கதையம்சம் நிறைந்தப் படங்கள் இல்லாததும், பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு, கலாசாரம் இல்லாதது ஆகியவை எல்லாம் இதற்கு காரணமாக கூறப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’, அக்ஷய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ படங்கள் உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.

இந்த பாய்காட் புறக்கணிப்பிற்கு எந்த நடிகர்களும், நடிகைகளும் தப்புவதில்லை. இந்நிலையில்தான் இந்தியில் தயாராகும் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தையும் புறக்கணிக்குமாறு ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக கரண் ஜோஹர் உள்ளார். இதுதான் தற்போதைய புறக்கணிப்பிற்கு காரணம். சுஷாந்த் சிங் தற்கொலையின்போது கரண் ஜோஹர், ஏக்தா கபூர், ஆலியா பட், ஆதித்ய ராய் கபூர், ரன்பீர் கபூர், மகேஷ் பட், சோனம் கபூர் உள்பட பல பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் நெப்போட்டிசத்துக்கு காரணமாக கூறப்பட்டன.

பெரும்பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘லைகர்’ படம் பாய்காட் கலாசாரத்தை மீறி பாலிவுட்டில் வெற்றிபெறும் என்று சமீபத்தில் விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் தெரிவித்தநிலையில், இன்னும் 4 நாட்களில் படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு தற்போதே பாலிவுட் ரசிகர்கள் #BoycottLigerMovie என்று குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com