\
Vidya breaks Usha's record with 3 medals! Father celebrates with joy!
vidhya ramarajReuters

உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா! ஒரேபோட்டியில் 3 பதக்கங்கள்! பட்டாசு வெடித்து கொண்டாடிய தந்தை!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப்போட்டியில், பந்தய தூரத்தை வெறும் 54.75 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா, இந்திய தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை 55.42 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்தார்.

மேலும், 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், ஏற்கெனவே கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்றிருந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்.

vidhya ramaraj
vidhya ramarajani

இந்நிலையில், தங்கள் மகளின் சாதனை குறித்து அவரது பெற்றோரும், சாதனை படைத்த வித்யா ராமராஜும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளனர்.

வித்யா ராமராஜின் அசத்தலான சாதனை குறித்து பேசிய அவரது தந்தை ராமராஜ், தனது மகள் பதக்கம் வென்ற மகிழ்ச்சியைவிட, பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்ததுதான் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “குழந்தைகளுக்கு திறமை இருந்தால், அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்களை அவர்களது வழியில் விட்டாலே அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். அப்படித்தான், எனது பிள்ளைகளின் ஆர்வத்துக்கு துணைநின்றதால், இன்று அவர்கள் அசத்தலான சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்” எனப் பேசியுள்ளார்.

தனது மகளின் சாதனை குறித்து பெருமையுடன் பேசிய அவரது தாய் மீனா, “எனக்கு மூன்று பெண் குழந்தைகள். ‘மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று வைத்திருக்கியே... உனக்கு யார் கொள்ளி வைப்பார்கள்?’ என்றும், ‘இந்தக் குடும்பம் பெண் குழந்தைகளை ஓடவிட்டு திங்குற குடும்பம்’ என்றும் பலரும் பேசியிருக்கிறார்கள்.

அவர்கள் வாயடைத்துப் போகும் அளவுக்கு என் மகள் சாதனை படைத்திருக்கிறார். வித்யா, உஷாவின் சாதனையை முறியடித்தபோது, அவருடைய அப்பா 100 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வந்து வெடித்தார். அந்த அளவுக்கு எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தது குறித்து தொலைபேசி வாயிலாகப் பேசிய வித்யா ராமராஜ், “உஷா அவர்களின் சாதனையை முறியடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. மிகவும் கடினமான சூழலில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளோம். தாய்நாட்டுக்காகப் பதக்கங்கள் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com