உ.பி: இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரது குடும்பத்தினரே செய்ததாக பாஜக வீடியோ வெளியீடு!
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரது குடும்பத்தினரே செய்ததாக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயலில் வேலைக்கு செல்லும் 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பற்றி போலீசில் கூறுவிடுவார் என்பதால் அவரது நாக்கை குற்றவாளிகள் அறுத்தனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட அந்த பெண் டெல்லியில் உள்ள சம்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது உடலை போலீசாரே வலுக்கட்டாயமாக தகனம் செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் அப்பெண்ணின் உடல் வலுக்கட்டாயமாக குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு காவல்துறையினரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் ஹரியானா ஐடி பிரிவுத் தலைவர் அருண் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரின் குடும்பத்தினரே செய்தார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஒரு வயதானவர் உட்பட கிராம மக்கள், இறுதிச்சடங்கு செய்வதுபோல் காட்டப்பட்டுள்ளது.
இறந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் இறுதி சடங்கிற்கு சம்மதித்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கடைசி சடங்குகளின் போது இருந்ததாகவும் ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறினார்.