மனு கொடுக்க வந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ: வீடியோ வைரல்!

மனு கொடுக்க வந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ: வீடியோ வைரல்!
மனு கொடுக்க வந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ: வீடியோ வைரல்!

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி , பெண் ஒருவரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெண் ஒருவர் அவரிடம் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி அவரிடம் மனு கொடுக்க முயன்றபோது, அவரை சிறையில் அடைத்துவிடுவேன் என அரவிந்த் லிம்பாவலி மிரட்டினார். அதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணை இரவு 10 மணி வரை காவல்நிலையத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ. லிம்பாவலி, தனது கையை இழுக்க முயன்று, அடிக்க முற்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி அந்தப் பெண்ணை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்த வீடியோவை பகிர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வாக்குறுதியில் பாஜக பாசாங்குத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். “மக்கள் பிரதிநிதியாக ஒரு பெண்ணிடம் உங்கள் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் லிம்பாவலி தகாத முறையில் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாதது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த லிம்பாவலி தாம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த பெண் காங்கிரஸ் கட்சி ஊழியர் என்றும் கூறினார். “இதற்கு நான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், இதே உங்கள் கட்சித் தொண்டரான ரூத் சாகாய் மேரி, பல ஆண்டுகளாக ராஜ்காலுவை ஆக்கிரமித்து மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். அதைக் காலி செய்யச் சொல்லுங்கள். பிடிவாதத்தை இங்கேயே நிறுத்தச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார் அரவிந்த் லிம்பாவலி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரவிந்த் லிம்பாவலியின் மகள் ரேணுகா பெங்களூரிலுள்ள சட்டசபைக்கு அருகில் காரில் வேகமாக சாலை விதியை மீறி காவலர்களின் வாகனத்தை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது தன் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என பேசிய நிலையில், அரவிந்த் லிம்பாவலியின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com