”அரசியலுக்கு வராதீங்க.. அது ஆரோக்கியமற்றது” - ரஜினியிடம் வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்?

”அரசியலுக்கு வராதீங்க.. அது ஆரோக்கியமற்றது” - ரஜினியிடம் வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்?
”அரசியலுக்கு வராதீங்க.. அது ஆரோக்கியமற்றது” - ரஜினியிடம் வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்?

“அரசியலுக்கு வர வேண்டாம். அது ஆரோக்கியமற்றது. அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என ரஜினியிடம் நானே ஃபோனில் தொடர்புகொண்டு பேசினேன்” என முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறார்.

சேபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷனின் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்தும், முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வைரலாகி வரும் வேளையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ரஜினியிடம் அரசியலுக்கு வரவேண்டாம் என கூறியதை பற்றியும் பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அப்போது அவர் பேசியதன் விவரத்தை காணலாம்:

“ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர், சமூக பொறுப்பு அதிகம் கொண்டவர், எவ்வளவு வளர்ந்தாலும் மிகவும் பணிவானவர். அவர் நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சு வந்த போது என் குருவான குருமூர்த்தியிடம் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என கூறுங்கள் என தெரிவித்தேன்.

ஏனெனில், அவர் நல்ல மனிதர். நானே அவரை ஃபோனில் அழைத்து, அரசியலுக்கு வர வேண்டாம். அது அரோக்கியமற்றது. அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வந்தால் அது இருக்காது எனக் கூறினேன். அதற்காக இளைஞர்களை அரசியலுக்கு வரவேண்டாம் என கூறவில்லை. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கொள்கைகளை பின்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.

மேற்கத்திய கலாசாரங்களை பின்பற்றும் இளைஞர்கள், உடல்நலத்தை காக்க ஏதேனும் ஒரு விளையாட்டையும் கற்க வேண்டும். 74 வயதில் இப்போதும் பேட்மின்டன் விளையாடுகிறேன். ஒரு மணிநேரம் யோகா செய்ய வேண்டும். யோகாவை ஏதோ மதத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதனை மோடியுடன் ஒப்பிடுகிறார்கள். Yoga is not for modi. its for your body.

இளைஞர்கள் உணவு பழக்கத்தை பராமரிக்க வேண்டும். துரிதமாக தயாரிக்கக் கூடிய உணவுகளையே சாப்பிடுகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும். தினமும், சாப்பிடக்கூடிய சாதாரண உணவு பழக்கங்களையே தற்போது தவிர்க்கிறார்கள். அதிலிருந்து மீண்டு சரியான நேரத்தில் தூங்கி, சாப்பிட வேண்டும். காலை எழுந்ததும் வணக்கம் சொல்லுங்கள். தாய்மொழியில் பேசுவதை பெருமையாகக் கொள்ளுங்கள்.” என வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com