
ஜம்மு- காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுப்பிய கேள்விக்கு வெங்கையா நாயுடு பதில் அளித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து கடும் அமளி ஏற்பட்டது. அவைத் தலைவர் இடத்தை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து அமித்ஷா தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டார். மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் அரசியல் சாசன அவையை ஜம்மு- காஷ்மீர் இழந்தது.
மேலும் 6 ஆண்டுகாலமாக இருந்த சட்டப்பேரவை 5 ஆண்டுகாலமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவையே களேபரமானது. தமிழக எம்.பிக்களான திருச்சி சிவா, வைகோ ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் வைகோ பேசும்போது மத்திய அரசு மீண்டும் எமெர்ஜென்சியை கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த வெங்கையா நாயுடு, இது எமெர்ஜென்சி அல்ல. இது அர்ஜென்சி எனத் தெரிவித்தார். அதாவது அவசரத் தேவை எனத் தெரிவித்தார்.