குடியரசுத்தலைவர் காருக்கும் இனி நம்பர் ப்ளேட்!

குடியரசுத்தலைவர் காருக்கும் இனி நம்பர் ப்ளேட்!
குடியரசுத்தலைவர் காருக்கும் இனி நம்பர் ப்ளேட்!

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கும் விரைவில் பதிவு எண் பொருத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நியாய பூமி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களின் வாகனங்களில் பதிவு எண் இருக்க வேண்டிய, இடத்தில் இந்திய அரசின் சின்னமான 4 சிங்கங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், தீங்கு விளைக்க நினைப்பவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எளிதில் தாக்குதல் நடத்த இயலும் என கூறியுள்ளார். அத்துடன் இந்த வாகனங்கள் ஏதேனும் விபத்தை ஏற்படுத்திவிட்டால், அதற்கு வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் நிதி பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே மோட்டார் வாகன சட்டப்படி குடியரசுத்தலைவர் உள்ளிட்ட அனைவரது வாகனங்களிலும் பதிவு எண்ணை பொருத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய போக்குவரத்துறை அமைச்சகம், கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்றே இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள், அமைச்சரவை பொறுப்புகளில் உள்ளவர்கள், சட்டப்பேரவை அதிகாரிகள் என அனைவரது வாகனங்களையும் பதிவு செய்ய அந்தந்த அலுவலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி விரைவில் அவர்களது வாகனங்களில் பதிவு எண்கள் பொருத்தப்படும் என கூறியுள்ளது. அத்துடன் பதிவு செய்யப்படாத வாகனங்களில் மோட்டார் வாகன சட்டப்படி, பதிவு செய்யப்பட வேண்டிய வாகனம் என குறிப்பிடப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது. இருதரப்பு மனுவையும் ஆராய்ந்த நீதிமன்றம், அனைத்து வாகனங்களிலும் அதற்கான பதிவு எண்களை அமைச்சகங்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அது குடியரசுத்துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கும் பொருந்தும் என்று சுட்டிக்காட்டியது. மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் 14 வாகனங்களிலும் பதிவு எண்களை பொருத்தி, அவற்றையே இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் பயன்படுத்துமாறு கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com