பசு பாதுகாப்பு, பசுப்பாதுகாவலர்கள் எனும் பெயரால் நடக்கும் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த பசு மீது, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் கார் மோதியது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சாலையில் சென்ற பசு மாடு மீது அமித்ஷாவின் பாதுகாப்பிற்கு சென்ற கான்வாய் வாகனம் மோதியது. பசுக்காக பல சட்டங்களை அமல்படுத்தும் பாஜகவின் தேசிய தலைவரின் பாதுகாப்பு வாகனமே, பசு மீது மோதியதை ஒடிஷா பிஜூ ஜனதா தளத் தலைவர் சத்பதி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அந்த ட்வீட்டில், “அமித்ஷாவின் கான்வாய் வாகனம் பசு மீது மோதியுள்ளது. பசு மோசமாக காயமடைந்துள்ளது. புனித பசு” என பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் பிரதாப் சாரங்கி அளித்துள்ள விளக்கத்தில், ”அமித்ஷாவின் பாதுகாப்புக்கு வந்த வாகனம்தான் மோதியது. விபத்து குறித்த தகவலை மாவட்ட ஆட்சியரிடம் உடனே தெரிவித்தோம். காவல்துறையினர் மூலம் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசு நலமாக உள்ளது” என்றார்.