கர்நாடக சிறையில் இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி சைமன் உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஒட்டர் தொட்டி என்ற ஊரை சேர்ந்தவர் சைமன் (வயது 60).சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டார். நான்கு தடா வழக்குகளில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு வழக்கில் வாழ்நாள் தன்டனை பெற்ற சைமன் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆறு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மைசூர் சிறை மருத்துவமனையிலும், மாவட்ட அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். உயர் சிகிச்சைக்காக பெங்களூர் சிறைக்கு அனுப்பப்பட்ட சைமன், கடந்த இரு தினங்கள் முன்பு பெங்களுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்திலையில், இன்று காலை 4 மணிக்கு சைமன் உயிரிழந்துள்ளார். பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று மாலை ஒட்டர் தொட்டிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.