’வெல்க ஜனநாயகம்’ என்று கூறி பதவியேற்ற திருமாவளவன்
மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வெல்க ஜனநாயகம், வெல்க சமத்துவம் என்று கூறி தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். இவர்களை தொடர்ந்து பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர். இன்றும் பல்வேறு மாநில உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவியேற்றனர்
(திருநாவுக்கரசர்)
பெரும்பாலான எம்.பிக்கள் வெள்ளை, சட்டை வேஷ்டியில் பதவியேற்றனர். இதில் வித்தியாசமாக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கருப்பு சட்டை அணிந்து பதவியேற்றுக் கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ’வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வெல்க ஜனநாயகம், வெல்க சமத்துவம்’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி, ரவிக்குமார், ‘வெல்க தமிழ், வெல்க அம்பேத்கர்’ என்று கூறி பதவியேற்றார்.
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி, பி.ஆர்.நடராஜன், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்காரர், கடவுள் மீது உறுதி கூறி பதவியேற்றார்.