பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘ஆண்டி ரேப் கன்’ - தொட்டால் சுடும்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘ஆண்டி ரேப் கன்’ என்ற பணப்பையை உருவாக்கியுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பெருநகரங்களில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, வாரணாசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ட்ரிகர் பொருத்தப்பட்ட பணப்பையை தயாரித்துள்ளார். இதற்கு ஆண்டி ரேப் கன் என்ற பெயரையும் அவர் சூட்டியுள்ளார்.
இந்த பிரத்யேக மணி பர்ஸுக்குள் புளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஆபத்து நேரத்தில் இதில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் அது தானாவே பெண்கள் பாதுகாப்பு மையத்தையோ அல்லது காவல் நிலையத்திற்கோ செய்தி அனுப்பி அழைப்பு விடுக்கும். ஆபத்து தீவிரமாக இருந்தால், சிக்கலில் இருப்பவர்கள் பணப்பையில் பொருத்தப்பட்ட ட்ரிகரை அழுத்தினால் அதிலிருந்து வெளியேறும் பயங்கர சத்தம் அருகில் உள்ளவர்ளுக்கு சம்பவம் குறித்து கவனிக்கச் செய்யும். இதனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்த ட்ரிகரால் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படாது என ஷியாம் சவுராசியா தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும் ஆண்டி ரேப் கன்-ஐ தயாரித்த இவர் ஏற்கனவே எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கவசத்தையும் தயாரித்த அயர்ன் மேன் என்று பரவலாக அறியப்பட்டவர்.