\
Vande Bharat train traveled with faulty brakes in 465 km
Vande Bharat train traveled with faulty brakes in 465 kmANI

பழுதான பிரேக்குடன் பயணித்த வந்தே பாரத் ரயில் : தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து.. 463 கி.மீ பயணம்!

பழுதான பிரேக்குடன் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 463 கி.மீ பயணித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

பழுதான பிரேக்குகளுடன் வந்தே பாரத் ரயில் 463 கி.மீ பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் பாதுகாப்பு சோதனையில் பிரேக் திறன் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. பணியாளர்களின் தவறுகள் மற்றும் போதிய புரிதல் இல்லாமை காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கான விசாரணை தென்கிழக்கு ரயில்வே வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹாட்டியாவிலிருந்து (Hatia ) உத்தரபிரதேச மாநிலம் ஜான்சிக்கு கடந்த அக்டோபர் 24-ம் தேதி பயணிகள் எவரும் இல்லாத வந்தே பாரத் ரயில் பெட்டிகளை இழுத்துக்கொண்டு சரக்கு ரயில் என்ஜின் ஒன்று சென்றுள்ளது.

இந்த ரயில் உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) நிலையத்தில் வந்தபோது அங்கிருந்த பணியாளர்கள் அந்த ரயிலில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் இருந்த பிரேக்குகள் பழுதடைத்திருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் பெட்டிகளின் பிரேக்குகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த பெட்டிகள் ஜான்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ரயில்வே வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நவம்பர் 7-ம் தேதி இது குறித்து விசாரணை நடத்த தென்கிழக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், ரயில் பெட்டிகளில் நடைபெற்ற சோதனையில் ​ரயிலின் பிரேக் திறன் மிகவும் மோசமாகவும், பயனற்ற நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ரயிலைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்த பணியாளர்கள், ரயில் புறப்படுவதற்கு முன்பாக பிரேக்குகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்கத் தவறிவிட்டனர் என்றும், ரயிலை இறக்கிய லோகோ பைலட்கள் பிரேக் செயல்பாடு சரியாக இல்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்குத் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டிகளின் பிரேக் அமைப்புகள் செயல்படாத நிலையில், என்ஜினின் பிரேக்குகள் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) முறையை மட்டுமே பயன்படுத்தி, அந்த ரயில் பெட்டிகள் சுமார் 463 கி.மீ தூரம் பயணித்துள்ளது என்றும், வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் பிரேக் சிஸ்டம் குறித்து பணியாளர்களுக்கு போதிய புரிதல் இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு, போதுமான பிரேக் திறன் இல்லாத நிலையில் ரயிலை இயக்குவது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும் என்றும், இது ஒட்டுமொத்த ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vande Bharat train traveled with faulty brakes in 465 km
ஒரே நேரத்தில் எரிந்த 40 செயற்கைக்கோள்கள்: அமேசான் நிறுவனத்துக்கு பேரிடி! என்ன நடந்தது?