விகாஸ் துபே விவகாரம்: உ.பி. காவல்துறை மீது எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!

விகாஸ் துபே விவகாரம்: உ.பி. காவல்துறை மீது எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!
விகாஸ் துபே விவகாரம்: உ.பி. காவல்துறை மீது எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே கடந்த ஜூலை 10-ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள மாநில அரசு, "விகாஸ் துபேவை உஜ்ஜைனில் இருந்து கான்பூருக்கு வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனம் கவிழ்ந்துவிட்டது. போலீசாரை சுட்டு விட்டு தப்பியோடும் திட்டம் விகாஸ் துபேக்கு இருந்ததால் அவரை சுடுவதே போலீசாருக்கு அச்சமயத்தில் ஒரே தீர்வாக இருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்ததில் சந்தேகம் இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''குற்றவாளி இறந்துவிட்டார். அவர் செய்த குற்றங்கள் மற்றும் அவரை பாதுகாத்தவர்கள் குறித்து என்ன செய்வது?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் டிஜிபி ஹிடேஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை  அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.

* விகாஸ் துபே மீது, கொலை, கொலை முயற்சி உட்பட 63 கிரிமினல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர். நிகழாண்டில் மட்டும் 3 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள், கல்விநிலைய உரிமையாளர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்த வழக்குகளும் உள்ளன.

விகாஸ் துபே துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றவர் என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விகாஸ் துபேவின் கூட்டாளிகளுக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் இருந்துள்ளது.  விகாஸ் துபே போன்ற ஒரு அச்சுறுத்தலான குற்றவாளிக்கு அரசின் துப்பாக்கி உரிமம் கிடைத்தது எப்படி?

* சவுபிபூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்செயல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக விகாஸ் துபேயின் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. அவர் பல முறைகள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுவரை அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படதாது ஏன்?

* கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் விகாஸ் துபேவை குறித்து  துப்பு கொடுத்து உதவுவோருக்கு ரூ 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறையால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதே காலத்தில் துபே தனது மருமகனின் திருமணத்தில் கலந்துகொண்டதாக கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. காவல்துறையால் சன்மானம் அறிவித்து தேடப்படும் குற்றவாளி பொதுவெளியில் சாகவாசமாக உலாவிவந்தது எப்படி?

* விகாஸ் துபே மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும் எதற்காக சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறித்து காவல்துறையிடம் எந்த பதிலும் இல்லை. கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளும் இதில் அடக்கம்.

* கான்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரவீன் மோத்தா கூறும்போது, ‘’2000, 2001, 2004 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த கொலைகளிலும் விகாஸ் துபே மீது குற்றம்சாட்டப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் விகாஸ் துபேக்கு செல்வாக்கு உண்டு. அதனால் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும், விரைவில் அவர் வெளியே வந்துவிடுவார்'' என்று கூறினார்.

* ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விகாஸ் துபே, சிறைத்துறை அதிகாரிகளின் சாதகமான அறிக்கையினால் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஜூலை 2-ஆம் தேதி துபே எட்டு போலீஸ்காரர்களை படுகொலை செய்தபோது, அவர் பரோலில் இருந்தார் என்று உச்சநீதிமன்றத்தில் டிஜிபி அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான குற்றங்களின் நீண்ட பட்டியலைக் கொண்ட துபே போன்ற ஒருவர் எவ்வாறு பரோலில் வெளியே வர முடியும்? 

இவ்விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் கூறுகையில், ''வாகனம் தலைகுப்புற விழவில்லை, அரசு தலைகுப்புற விழாமல் இருக்க ரகசியங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன'' என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com