மாநிலங்களவை வேட்பாளராக இன்று வைகோ வேட்புமனுத் தாக்கல்
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல், வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் தொமுச-வைச் சேர்ந்த சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதேபோல, திமுக வேட்பாளர்கள் சண்முகம் மற்றும் வில்சனும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.