“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை

“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை

“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை
Published on

நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கின்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பாரதிய ஜனதா கட்சி வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்ற வேளையில், வேறு சில செய்திகள் கவலையையும், அதிர்ச்சியையும் தருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேற்று ஒரு பெண் உட்பட மூன்று இசுலாமியர்களை பசு மாட்டுக் கறி எடுத்துச் சென்றார்கள் என்று கூறி, ‘பசு காவலர்கள்’ மரத்தில் கட்டி வைத்துக் தாக்கும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்ளங்களில் வெளியாகியுள்ளது. ‘இராமர் சேனா’ தலைவர் சுஷபம் பகெல் உள்ளிட்ட கும்பல் இக்கொடுமையைச் செய்ததாக மத்தியப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த திங்கள் கிழமை குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள மாகூவத் கிராமத்தில் உள்ள கோயிலில், பட்டியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடத்துவதற்கு உயர் சாதியினர் தடை விதித்து இருப்பதாக, பிரவீன் என்ற பட்டியல் சமூகத்தவர் தனது முகநூலில் பதிவு செய்து இருக்கிறார். இந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று கூறி, இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன் மனைவி இருவரையும் தாக்கியுள்ளனர். 

இதுகுறித்து புகார் அளித்தும் குஜராத் காவல்துறை, இதுவரை அந்தக் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்தவர் மீது நடைபெற்றுள்ள இந்த வன்கொடுமைகள், நரேந்திர மோடியின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தை பிரதமர் மோடி சுழற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com