\
vadakku vaasal 7 series to dalit votes from North States
Model ImageChat Gpt

வடக்கு வாசல் - 7 | ஹல்துவானி சம்பவம்.. Con-க்கு கைகொடுக்குமா? உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் ஓர் அலசல்!

ஹல்தவானி 'சுத்திகரிப்பு' விஷயம், அடுத்து வரும் ஆறு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
Published on: 

ஹல்துவானியில் நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்வு

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்துவானி பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம், இன்று மூன்று மாநிலங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற அந்தக் கூட்டம் முடிந்து, சில நாட்களுக்குப் பிறகு ‘ஸ்ரீ ராம் சேனா’ என்னும் பாஜகவின் துணை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹோமம் நடத்தியிருக்கிறார்கள். கார்கே பேசியதால் தீட்டப்பட்ட இடத்தில் ஹோமம் நடத்தி தூய்மைப்படுத்தும் சடங்கை செய்ததாகக் கூறப்படுகிறது. ”ஹல்துவானியில் நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்வு, தீண்டாமையின் கொடுமையை தேசிய அளவில் வெளிப்படத்தியிருப்பதோடு, தனிப்பட்ட அளவில் தன்னை அவமானப்படுத்தியுள்ளது. சுத்திகரிப்பு சடங்கு நடத்தியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படவேண்டும்” என்று பேசிய மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்தை, காங்கிரஸ் மேலிடமும் வழிமொழிந்த பின்னர் தேசிய அளவில் பரபரப்பானது.

mallikarjun kharge
mallikarjun khargeANI

ஹல்தவானி 'சுத்திகரிப்பு' விஷயம், அடுத்து வரும் ஆறு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, எஸ்ஐஆர் நடைமுறை குறித்த விஷயங்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் அரசியலில் கைகொடுக்கப் போவதில்லை. ஆனால், சுத்திகரிப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியிருப்பது உண்மை.

தேசிய அளவில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் ஆதரவுத்தளத்தைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, ஹல்தவானி சுத்திகரிப்பு விஷயம் குறித்து தொடர்ந்து பேச முடிவெடுத்துள்ளது. அதன் மூலமாக சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் நெருக்கடியையும் தர முடியும். இந்து பாரம்பரிய ஆதரவுத்தளத்தை இழந்துவிடாமல் அதே நேரத்தில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஆதரவையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் பாஜக திணறுகிறது.

பட்டியலின மக்களின் பெரிய அளவு வாக்கு வங்கி

2027 தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி உண்டு. அவை காங்கிரஸ் கட்சி பக்கம் போய்விடாமல் பாஜக பக்கமும் இருந்த காரணத்தால் கடந்த காலங்களில் பாஜகவால் கணிசமான வெற்றிகளைப் பெற முடிந்திருக்கிறது. இந்நிலையில் ஹல்தவானி 'சுத்திகரிப்பு' விஷயம், பாஜகவின் பட்டியலின விரோத மனநிலையை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் பிரசாரம் செய்தால், அது அக்கட்சிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துவிடும்.

கடந்த மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹல்தவானி 'சுத்திகரிப்பு' விஷயம் குறித்து பேசத் தயங்கும் கட்சிகளை குறிப்பாக மாயாவதி உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்தார். ”காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு இழைக்கப்பட்டிருப்பது அநீதி, இது தொடர்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்றவர், ”இது முழுவதும் பாஜகவின் தூண்டுதலால் நடந்தேறியிருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

rahul, priyanka
rahul, priyankaANI

பாஜக கட்சியினர்தான் சுத்திகரிப்பு சடங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்னும் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, ”இதுபோன்ற நடவடிக்கைகளை தங்களுடைய கட்சி ஒருபோதும் ஆதரிக்காது” என்றார். இந்நிலையில், தவறான குற்றசாட்டு என்று உள்ளூரில் ராகுல்காந்தியின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கார்கே மட்டும் சம்பந்தப்பட்டிருந்த விஷயத்தில் தற்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் தீவிரமாக களத்தில் இறக்கியிருக்கிறது. வட மாநிலங்களைத் தாண்டி, தென்னிந்திய மாநிலங்களிலும் ஹல்தவானி 'சுத்திகரிப்பு' விஷயம் பேசப்படவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. கர்நாடகா காவல்துறை, இது குறித்து ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா ஹல்தவானி விவகாரம்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சுத்திகரிப்பு விவகாரம் நல்வாய்ப்பு. அதன் சமூக நீதிப் பற்றை பொதுவெளியில் நிரூபிக்கக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகக் கருதுகிறது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பிரச்னை குறித்து ராகுல் காந்தி விரிவாக பேசியதால், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

உ.பி போன்ற மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில் பட்டியலின மக்களின் பங்கு, ஏறக்குறைய 21 சதவீதம். அதாவது 4 கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின வாக்காளர்கள், உ.பி அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பெரும்பாலான பட்டியலின சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைத்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் நிலைமை வேறு. சாமார், பாசி, தோபி, கோரி, கட்டிக், வால்மீகி மற்றும் ஜாதவ் அல்லாத பட்டியல் சமூகங்கள் மத்தியில் பாஜக பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

congress
congressANI

பத்தாண்டுகளில் வாக்கு வங்கி மாற்றம்

பத்தாண்டுகளில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கியில் நிறைய மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. பாஜக தவிர சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் செல்வாக்கு பெற்றிருப்பது உண்மை. உ.பியைப் பொறுத்தவரை ஏறக்குறைய 41 சதவீத பட்டியலின வாக்கு வங்கி இன்னும் பாஜக வசமுள்ளது. அதே நேரத்தில், சமாஜ்வாதி கட்சிக்கும் பட்டியலின மக்கள் வாக்களிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியைக் கவலைப்பட வைத்துள்ளது.

சாதி, மதம் கடந்த புதிய வாக்காளர்களை காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய ஆதார வாக்கு வங்கியான சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால், பாஜகவின் வளர்ச்சி அரசியல், பட்டியலின மக்களின் வாக்கு வங்கியைச் சிதறடித்துவிடும். பாஜகவுக்கு மாற்றாக சமாஜ்வாதி கட்சியை பட்டியலின சமூகம் பார்க்க ஆரம்பித்திருப்பதும் காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பேசப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை பட்டியலின சமூகங்களின் ஆதரவைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்த தோல்வி ஏற்பட்டிருந்தது. ஆனால், 2024இல் கணிசமான பட்டியலின சமூக வாக்குகளை அறுவடை செய்ய முடிந்தது. அதற்கு முக்கியமான காரணம், I-N-D-I-A கூட்டணி. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து I-N-D-I-A கூட்டணியாக முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையோடு போட்டியிட்டதோடு,தேர்தல் பிரசாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் பற்றி பெரிதும் பேசப்பட்டது.

அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தால் பாஜக, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்துவிடும் என்று செல்லும் இடங்களிலெல்லாம் சிவப்பு நிற அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் மாதிரி வடிவத்தைக் கையில் ஏந்தியபடி மேற்கொண்ட பிரசாரத்திற்கு ஓரளவு பலன் இருந்தது. அதுதான் பாஜக எதிர்பார்த்திருந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பெரிய தடைக்கல்லாக இருந்தது.

உ.பியில் என்.டி.ஏ கூட்டணி, 24 சதவீத ஜாதவ் வாக்குகளைப் பெற்றது; அதே நேரத்தில் எஸ்பி-காங்கிரஸ் கூட்டணி 25 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி, 44 சதவீத வாக்குகளையும் பெற்றன. ஜாதவ் அல்லாத பட்டியலின சமூகங்கள் மத்தியில் பாஜக, தன்னுடைய ஆதரவை தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டியிருந்தது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், இம்முறை உ.பி, பாஜகவுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதுதான் நிஜம்..

பஞ்சாப்பில் ஆம்ஆத்மியின் வரவு

பஞ்சாப் மாநிலத்தில் பட்டியலின சமூகங்களுக்கு 33 சதவீத வாக்கு வங்கி இருந்தாலும், அவையெல்லாம் ஒரே கட்சிக்கு சென்றதில்லை. பட்டியலின சீக்கியர்கள் & பட்டியலின இந்துக்கள் என இருவேறு சமூகமாகப் பிரிந்து நிற்கிறார்கள். இருவரையும் இணைக்கும் இடத்தில் காங்கிரஸ் இருந்தவரை எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், ஆம் ஆத்மியின் வரவு பஞ்சாப் அரசியலை புரட்டிப்போட்டுவிட்டது. இன்றைய நிலையில் பட்டியலின சமூகங்களின் வாக்குகளை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் என நான்கு திசைகளிலும் உள்ள கட்சிகளால் சிதறடிக்கப்பட வாய்ப்பு உண்டு.

arvind kejriwal
arvind kejriwalANI

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் கணக்குகளில் பட்டியலின சமூகத்திற்கு தனி இடம் உண்டு. பாஜகவின் வளர்ச்சி அரசியல், பட்டியலின மக்களையும் பிற சமூகங்களையும் ஒரே புள்ளியில் இணைக்க முடிந்தது. 2024 வரை ஓரளவு பாஜகவின் கணக்குகள் அனைத்தும் சரியாகவே இருந்தன. I-N-D-I-A கூட்டணியும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படலாம் என்கிற பிரசாரமும் வளர்ச்சி அரசியலை பின்னுக்கு தள்ளிவிட்டன. இந்நிலையில் ஹல்துவானி சுத்திகரிப்பு சம்பவங்கள், பழைய காயங்களை மறுபடியும் கீறிவிடும் ஆபத்துள்ளது. அதே நேரத்தில், சர்வலோக நிவாரணியாக பாஜக ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தவும் வாய்ப்புண்டு.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 6 | வலுக்கும் மண்ணின் மைந்தர்கள் கோஷம்.. மாற்றத்திற்குத் தயாராகும் கோவா?

(வடக்கு வாசல் திறக்கும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com