உ.பி | பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தபின் கையைக் கழுவாமல் சாப்பிட்ட விவசாயி உயிரிழப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் கன்ஹையா (27). இவர், கடந்த ஜனவரி 25ஆம் தேதி தன்னுடைய வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் சாப்பிட அமர்ந்துள்ளார். ஆனால், அவரது மனைவியோ, “போய்க் கை கழுவிவிட்டு வந்து சாப்பிடுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அவர் மனைவி வற்புறுத்தியும் கன்ஹையா கேட்கவில்லை. பின்னர் பூச்சிக்கொல்லி தெளித்த அதே கையுடன் இரவு உணவைச் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, படுக்கச் சென்றவருக்கு தூக்கம் வரவில்லை. மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று முன்னதாகவும் பூச்சிக்கொல்லி மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகப் பதிவாகி உள்ளது. 2023ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பாலேவாடியில் வேலைக்காரரின் அறையில் பூச்சிக்கொல்லி மருந்தை தற்செயலாக உட்கொண்ட 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு, குருகிராமில் முகமதுபூர் ஜார்சா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டு உயிரிழந்தார்.