உ.பி. | புருவத்தைச் சரிசெய்த மனைவி.. கோபத்தில் ஜடையை நறுக்கிய கணவர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராம் பிரதாப். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. என்றாலும், இவர் மீது வரதட்சணைப் புகார் உள்ளது. சமீபத்தில்கூட, குளிர்சாதன பெட்டி வாங்கிவர வேண்டும் என மனைவியிடம் ராம் பிரதாப் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்றிருந்த மனைவியை, தன் நண்பர்களுடன் சென்று அவரது ஜடையை ராம் பிரதாப் நறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் தந்தையான ராதாகிருஷ்ணா, மருமகன் ராம் பிரதாப் மீது வரதட்சணை கொடுமையின் கீழ் புகார் அளித்துள்ளார்.
”வரதட்சணை தராததால்தான் என் மகளின் ஜடையை அவர் நறுக்கியுள்ளார்” என போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், விசாரணையில், ராம்பிரதாப் மனைவி தனது புருவங்களை சரிசெய்ய அழகு நிலையத்திற்குச் சென்றதால் கணவர் கோபமடைந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது ஜடையை கணவர் நறுக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.