உ.பி. | ஜிம்மில் மதமாற்றம்.. புகார் அளித்த பெண்கள்.. பாய்ந்த நடவடிக்கை!
உத்தரப்பிரதேசத்தில் ஜிம்கள் என்ற போர்வையில் சட்டவிரோத மத மாற்ற மோசடி நடப்பதாக வெளியான புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்திருப்பதுடன், உடற்பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் ஜிம்கள் என்ற போர்வையில் சட்டவிரோத மத மாற்ற மோசடி நடப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரில், மதம் மாறுமாறு பலமுறை வற்புறுத்தியதாகவும், பர்தா அணியச் செய்ததாகவும், ஒருநாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்தச் சொன்னதாகவும், தர்காவிற்கு அழைத்துச் சென்று மதமாற்றத்திற்காக கல்மா ஓதும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், கொலை செய்யவோ அல்லது வீடியோக்களை இணையத்தில் வெளியிடவோ மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மிர்சாபூர் போலீசார் நான்கு நபர்களைக் கைது செய்தனர். தவிர, மாவட்டம் முழுவதும் குறைந்தது ஐந்து உடற்பயிற்சி மையங்களுக்கும் சீல் வைத்துள்ளனர். இதுதொடர்பாக பதிலளித்த மிர்சாபூர் பாஜக எம்எல்ஏ ரத்னாகர் மிஸ்ரா, ” ‘லவ் ஜிஹாத்’க்காக ஜிம்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தில், சட்டவிரோத மத மாற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது. காவல்து றையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர், இந்த விளையாட்டு தொடர அனுமதிக்கப்படாது" என அவர் தெரிவித்துள்ளார்.

