குற்றவாளியின் சொகுசு காரை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய நீதிபதி சஸ்பெண்ட்
உத்தராகண்டில் குற்றவாளிக்கு சொந்தமான சொகுசு காரை அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் பிரசாந்த் ஜோஷி. இவர் முசோரியில் உள்ள முகாம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு நாட்கள் விலையுயர்ந்த ‘ஆடி’ சொகுசு காரில் சென்று வந்துள்ளார். ‘மாவட்ட நீதிபதி’ என்று அந்த காரில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அலுவலக பணிக்காக நீதிபதி பிரசாந்துக்கு தனி கார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு காரை அவர் பயன்படுத்திய விவகாரம் மேலிடத்திற்கு சென்றது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அந்த ‘ஆடி’ கார் பல்வேறு மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டபட்டுள்ள கேவல் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து உத்தராகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி ரவி மாலி மாத், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக நீதிபதி பிரசாந்த் ஜோஷியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.