உத்தரகாண்ட் | ”Ex MLAக்களின் இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதை” - முதல்வர் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ளார். இந்த நிலையில், ”உத்தரகாண்டில் அனைத்து முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பொது வாழ்வில் முத்திரை பதித்த தலைவர்களின் இறுதிச் சடங்குகள் இனி முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும்” என அம்மாநில முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பகவான்பூர் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் பட்டேவாலே ஆகியோருக்கு இன்று, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அவருடைய இந்த அறிவிப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது ஷாஜாத் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, ”பகவான்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இறுதிச் சடங்கில் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது” என லக்சர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ முகமது ஷாஜாத் தெரிவித்தார். இதற்குப் பின்னரே, அந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.