துப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை
உத்தரகாண்டில் கையில் துப்பாக்கிகளுடன் நடனமாடிய பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ பிரணவ் சிங் சாம்பியன். பல சர்ச்சைகளுக்கு பேர் போனவரான இவர், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரை பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில், எம்.எல்.ஏ மற்றும் அவரின் நண்பர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடுகின்றனர். தனது இரு கைகளிலும் துப்பாக்கியை வைத்து நடன மாடும் பிரணவ், ஒரு கட்டத்துக்கு மேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். மேலும் போதையில் அவரது நண்பர்களுடன் பிரணவ் கெட்ட வார்த்தைகளை சரளமாக பேசுகிறார். அதுவும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதையடுத்து உத்தரகாண்ட் காவல்துறையினர், எம்.எல்.ஏ வைத்திருக்கும் துப்பாக்கிக்கு உரிய ஆவணம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளரை அச்சுறுத்தியதற்காக கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எம்எல்ஏ பிரணவ்வை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி மேலிடத் தலைவர்கள் பரிந்து ரைத்திருப்பதாக, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் ஷியாம் ஜாஜு தெரிவித்துள்ளார்.