உத்தராகண்ட்: வீட்டிற்குள் நுழைந்து செல்ல நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை
உத்தராகண்ட்டின் நைனிடால் பகுதியில் உள்ள மிருக காட்சி சாலை அருகே அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த வளர்ப்பு நாயை அடித்து கொன்று விட்டு சென்றுள்ளது அந்த சிறுத்தை. இந்த சம்பவமத்தின் காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடு சந்தன் சிங் என்பவருக்கு சொந்தமானது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மகள் தபிஷா பத்திரிகையாளார்களிடம் கூறும்போது, “இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்த சிறுத்தை எங்கள் நாயை கொல்ல முயன்றது. ஆனால் அந்த தாக்குதலிலிருந்து எங்கள் நாய் தப்பித்துவிட்டது. அதை நாங்கள் சிசிடிவி காட்சிகளில்தான் பார்த்திருந்தோம். கடந்த சனிக்கிழமை மீண்டும் சிறுத்தை எங்கள் வீட்டுக்குள் வந்துள்ளது. அது கதவின் அருகே நின்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும் எங்கள் நாய் குரைக்க ஆரம்பித்தது. அடுத்த சில நொடிகளில் எங்கள் நாயை அது பிடித்துக் கொன்றது. இதெல்லாம் எங்கள் கண் முன்பே நடந்தது” என்றார்.
வன விலங்குகள் மனிதர்களைத் தாக்கும் ஆபத்துகள் வரும் நாட்களில் ஏற்படாமல் இருக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் சந்தன் சிங். மே மாதத்தில் இதே பகுதியில் புலி ஒன்று இரண்டு கிராமவாசிகளை காயப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.