உ.பி: தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி ஆசிரியர்!

உ.பி: தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி ஆசிரியர்!
உ.பி: தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி ஆசிரியர்!

உத்தரப் பிரதேசத்தில் துவக்கப் பள்ளி ஒன்றில் தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரை பள்ளி ஆசிரியர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அரவிந்த் குமார் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வரும் திகேந்திர பிரதாப் சிங் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். கடந்த காலங்களில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளார் பிரதாப் சிங்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை பள்ளிக்கு தாமதமாக வந்த பிரதாப் சிங், வருகை தராத முந்தைய நாட்களிலும் வருகை தந்ததாக கையெழுத்திட்டுள்ளார். இதற்கு தலைமை ஆசிரியர் அரவிந்த குமார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியரை தாக்கியுள்ளார் பிரதாப் சிங்.

இந்நிலையில், ஆத்திரத்தில் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலைமை ஆசிரியரை மூன்று முறை சுட்டுள்ளார் பிரதாப் சிங். இருப்பினும் நல்வாய்ப்பாக துப்பாக்கிச் சூட்டில் இருந்து தலைமை ஆசிரியர் காயம் எதுவும் ஏற்படாமல் உயிர்தப்பினார். உடனடியாக பள்ளிக்கு வந்த தொகுதி கல்வி அதிகாரி சகீத் நீர்ஜா சதுர்வேதி இது குறித்து விசாரணை நடத்தி உதவி ஆசிரியர் பிரதாப் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அடுத்ததாக பள்ளிக்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர்கள், சம்பவத்தின் போது பள்ளியில் இருந்த மாணவர்களிடம் விசாரணை செய்து பிரதாப் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடிய அவரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அவரது துப்பாக்கியின் உரிமத்தை ரத்து செய்யவும் காவல்துறை தரப்பில் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com