உ.பி. | சம்மனை ஒழுங்காய்ப் படிக்காமல் நீதிபதியைத் தேடிய போலீஸ் அதிகாரி!
உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பன்வாரிலால். காவல்துறை துணை ஆய்வாளரான இவரிடம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிரான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருட்டு வழக்கு ஒன்றில், தலைமறைவாக இருந்த ஆக்ராவைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நீதிபதி நஜ்மா கான் என்பவர் பிறப்பித்திருந்தார். மேலும், குற்றஞ்சாட்ட நபரிடம் சம்மனை அளிக்கும் வேலை காவல்துறை துணை ஆய்வாளர் பன்வாரிலால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சம்மனைப் பெற்றுக்கொண்ட பன்வாரிலால், குற்றஞ்சாட்ட நபரின் பெயரை ஒழுங்காய்ப் படிக்காமல், நீதிபதியின் பெயரை மட்டும் படித்துவிட்டு, அதுதான் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் பெயர் எனத் தவறுதலாக நினைத்துக்கொண்டு அவரைத் தேட ஆரம்பித்துள்ளார்.
ஒருகட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க முடியாமல், நீதிமன்றத்தை நாடிய பன்வாரிலால், மீண்டும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அப்போது அவர் அறிக்கையைப் பார்த்த நீதிபதிக்கே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெயர் இருந்த இடத்தில் நஜ்மா கான் என சம்மன் பிறப்பிக்க உத்தரவிட்ட தனது பெயரே இருப்பதைப் பார்த்து அதிரச்சி அடைந்தார். இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, காவல்துறை அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நீதிபதி, ”காவல் துணை ஆய்வாளர் அந்த சம்மனைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. இதுபோன்ற வெளிப்படையான மற்றும் கடுமையான தவறு, ஒரு காவல்துறை அதிகாரியாக அவர் செய்யும் பணியின் தரத்தை மோசமாகப் பிரதிபலிக்கிறது. இதுபோன்ற அலட்சியப் போக்குடைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அது அனைவரின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும். பன்வாரிலாலின் அலட்சியத்திற்காக அவர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்” என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த சுவையான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.