உ.பி.கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் - 19 பேர் அதிரடி கைது
உத்தரப்பிரதேசக் கலவரத்தில் தலைமைக் கான்ஸ்டபிள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்பிற்கு சென்றிருந்த காவலர்கள் வாகனம் ஒன்று, நிகழ்ச்சிக்குப் பின்னர் காவல்நிலையம் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது காழிபூர் என்ற இடத்தில் காவல் வாகனத்தை மறித்து நிஷாத் கட்சி என்பவர்கள் போராட்டம் நடத்தினர். நிஷாத் என்பது உத்தரப்பிரதேசத்தில் 2 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். அவர்களின் கட்சியை சேர்ந்த 4 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி இந்த போராட்டத்தை ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றபோது, அங்கு காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சரமாரியாக கற்களைக் கொண்டு காவல்துறையினர் மற்றும் காவல் வாகனங்கள் மீது வீசியனர். அவர்களது கல்வீச்சில் தலைமைக் காவலர் சுரேஷ் பிரதாப் சிங் (48) என்பவர் சிக்கிக்கொண்டார். தலைமையில் கல்பட்டு படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கல்வீச்சில் ஈடுபட்ட 32 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது.
இந்நிலையில் வழக்குப்பதியப்பட்டுள்ள 32 பேரில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கல்வீச்சில் ஈடுபட்ட 80 பேரையும், சம்பவ இடத்தில் இருந்த கேமராக்களைக் கொண்டு அடையாளம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதம் பாலந்தஸ்ஹர் என்ற மாவட்டத்தில் பசு பாதுகாப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்ட நபரை கடந்த வாரம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு காவலர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் இந்த முறை அதி தீவிர மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரப்பிரதேச காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 19 பேரில் 11 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
உயிரிழந்த காவலரின் மனைவிக்கு ரூ.40 நிவாரணத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன் அவரது பெற்றொருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என யோகி தெரிவித்துள்ளார். இருப்பினும் உயிரிழந்த தலைமைக் காவலரின் மகன் கூறும்போது, “காவல்துறையிடம் இனி நாங்கள் என்ன எதிர்பார்ப்பது. அவர்களின் சொந்த துறையை சேர்ந்தவரையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லையே. இந்த இழப்பை எங்களால் எப்படி ஈடுசெய்ய முடியும். நான் எனது தந்தையே இழந்துவிட்டேன். இதேபோன்ற சம்பவங்கள் முன்பே பிரதாப்கார் மற்றும் பால்ந்தஸ்ஹரில் நடந்துள்ளதே” என கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் மாநிலத்தின் வன்முறைகள் அதிகரித்துவிட்டன. சட்ட ஒழுங்கு என்பது சீர்குலைந்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது உத்தரப்பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரடைந்து, முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.