உ.பி: குடும்பத்தினருடன் சண்டை... தலைமறைவான இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!

உத்தரப்பிரதேச இளைஞரொருவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் அவர்களிடமிருந்து தப்பிக்க செய்த அதிர்ச்சி செயல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை
சிறுத்தைPT

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த 25 வயது இளைஞர் லலித் குமார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் லலித் குமார், ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தனது குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

ஆகஸ்ட் 17ம் தேதி பண்ணைக்கு சென்ற லலித் குமார் காணாமல் போய் இருக்கிறார். லலித்குமாரை காணாததால், உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு, ஊர் மக்களுடன் சேர்ந்து குடும்பத்தினரும் தேடத்தொடங்கியுள்ளனர். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் லலித்குமார் வேலைசெய்யும் பண்ணைக்கு அருகில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால், அவரை சிறுத்தை இழுத்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று ஊர் மக்கள் எண்ணினர். ஏனெனில் லலித்குமாரின் மோட்டார் சைக்கிள், மொபைல் போன், அவர் அணிந்திருந்த காலணி ஆகியவை காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

சிறுத்தை
சந்திரயான் 3 | ரோவரின் செம Moon Walk-அ பார்த்திருக்கீங்களா?

இதனால் உள்ளூர் காவல் துறை வனத்துறை குழுவுடன் இணைந்துக்கொண்டு காட்டில் லலித்குமாரின் உடல் பகுதி ஏதேனும் கிடைக்கிறதா என்ற கோணத்தில் தேடி வந்தனர். பல நாட்கள் தேடுதலில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் சிறுத்தை புலி அவரை முழுவதுமாக இரையாக்கிக்கொண்டது என்று நம்பி ஊர் மக்களும் போலீசாரும் லலித்குமாரை தேடுவதை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும் அவரது குடும்பத்தார் லலித்குமாரை தேடுவதை நிறுத்தவில்லை. ஏனெனில் லலித்குமார் பயன்படுத்தி வந்த மொபைல் போனில் இரண்டு சிம்களில் ஒன்றுதான் தேடுதலின்போது கிடைத்துள்ளது. மற்றொன்று கிடைக்காமலேயே இருந்துள்ளது. ஆகையால் கோட்வாலி தேஹாத் காவல் நிலையத்திற்கு சென்று லலித்குமார் காணாமல் போனதாக மீண்டுமொரு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். புகாரின் பெயரில் கோட்வாலி போலீசார் மீண்டும் லலித்குமாரை தேட ஆரம்பித்தனர்.

லலித்குமாரின் மொபைல் போனை ஆராய்ந்த போலீசார், அதில் காணாமல் போயிருந்த ஒரு சிம்-ஐ டிராக் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் காணாமல் போன சிம்மின் சிக்னலானது சண்டிகரிலிருந்து கிடைத்துள்ளது. இதையடுத்து லலித்குமாரை தேடிக்கொண்டு சண்டிகர் புறப்பட்டு சென்றனர் போலீசார்.

சண்டிகரில் லலித்குமார் நண்பர் ஒருவர் மொபைலில் லலித்குமார் சிம் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் லலித்குமார் அவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

குடும்பத்தினருடன் சண்டையிட்ட லலித்குமார் குடும்பத்தினருக்கு பயந்து தன்னை சிறுத்தைபுலி தாக்கிவிட்டதாக எல்லாரும் நம்பும்படி செய்துவிட்டு சண்டிகர் சென்று தனது நண்பனுடன் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரைக்கூறி குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com