
பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால், இந்தியாவில் பல முக்கியச் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதுண்டு.
சாலைப் போக்குவரத்தில்தான் இந்த பிரச்னை என நினைத்து, பலரும் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுப்பதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட ரயிலேவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் சம்பவம்தான் தற்போது இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பொதுவாக ரயில் செல்கையில், அதற்கு இடையூறு ஏற்படாதவாறு சாலைப்போக்குவரத்தில் மாற்றங்களும் முன்னேற்பாடுகளும் செய்யப்படும். அதன்படி ரயில் செல்கையில் அருகேயுள்ள சாலையிலுள்ள வாகனங்களெல்லாம், ரயில் செல்லும்வரை நிறுத்தப்படும். இது அப்படியே தலைகீழாக நடந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது! உத்தரப்பிரதேசத்தில் சாலையில் கார்கள் சீராக செல்லவேண்டுமென நடுவழியில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலே நிறுத்தப்பட்டுள்ளது!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரயில்வே லெவல் கிராஸிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் பனாரஸில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த ரயில் சாலையின் மிக அருகேவே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபடுவதை கீழ்வரும் வீடியோவில் காணலாம்.
அப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கும் ரயில், ஹாரன் எழுப்பியபடி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.