உத்தரப்பிரதேச தேர்தல் 2022: பாஜகவுக்கு கெளரவ பிரச்னை; அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா வியூகம்?

உத்தரப்பிரதேச தேர்தல் 2022: பாஜகவுக்கு கெளரவ பிரச்னை; அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா வியூகம்?
உத்தரப்பிரதேச தேர்தல் 2022: பாஜகவுக்கு கெளரவ பிரச்னை; அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா வியூகம்?

நாட்டில் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டபேரவையாகவும் உத்தரப்பிரதேசம் இருக்கிறது, இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு 2022இல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெல்ல பாஜக – சமாஜ்வாதி கட்சி – பகுஜன் சமாஜ் என்ற மூன்று பெரும் கட்சிகளும் மும்மரமாக உள்ளன. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸும் இம்மாநிலத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் தேசிய கட்சிகளுக்கு மிக முக்கியமான மாநிலம். இம்மாநிலத்தில் மொத்தமாக 80 எம்.பி இடங்கள் உள்ளன. அதுபோல 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்களும் உள்ளன, அதிக சட்டமன்ற உறுப்பினர்களை இம்மாநிலத்தில் வென்றால் அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும். அதனால், இந்த மாநிலத்தில் பெரும் வெற்றிபெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது.

அதிர்ச்சியளித்த 2017 தேர்தல் – அசுர பலத்துடன் வென்ற பாஜக:

2017ல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெல்லும் என்று கருத்துக்கணிப்புகளில்கூட யாரும் கணிக்கவில்லை. ஏனென்றால் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக சமாஜ்வாதி கட்சியும், எதிர்க்கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியும் முழுபலத்துடன் களத்தில் நின்றது. சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ்க்கும் இடையே நடந்த உள்கட்சி பிரச்னையை தனக்கு சாதகமாக்கியது பாஜக. மாயாவதியின் மீதான ஊழல் புகார்களை பரப்புரை செய்து அவரையும் பாஜக கார்னர் செய்தது, காங்கிரஸ் கட்சி, சமாஸ்வாதியுடன் கூட்டணியில் இருந்தது. 2012 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி -224 இடங்கள், பகுஜன் சமாஜ் – 80 இடங்கள், பாஜக – 47, காங்கிரஸ் – 28, ஆர் எல் டி – 9 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. அதனால் 2017 கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தொங்கு சட்டசபை அமையலாம் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருந்தது. ஆனால் அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி மொத்தமுள்ள 403 இடங்களில் 303 இடங்களில் வென்று இமாலய வெற்றியை பெற்றது பாஜக. 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக -303, சமாஜ்வாதி – 47, பகுஜன் சமாஜ் – 19, காங்கிரஸ் – 7, அப்னா தள் - 9 இடங்களில் வெற்றிபெற்றது

மாயாவதியின் வாக்குகளால் தோல்வி:

2017 உத்தரபிரதேச தேர்தலில் இடங்களின் அடிப்படையில் அல்லாமல் வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தால் பாஜக 39.67% வாக்குகளையும், பகுஜன் சமாஜ் – 22.23% வாக்குகளையும் , சமாஜ்வாதி – 21.82% வாக்குகளையும், காங்கிரஸ் – 6.25% வாக்குகளையும் பெற்றிருந்தது. வாக்கு சதவீத அடிப்படையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் இருந்தன. அதனால் மாயாவதியின் வாக்குகள் தான் பாஜக வெல்ல காரணமாக இருந்தன என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குரலும் அக்கட்சிகளுக்குள்ளேயே எழ தொடங்கியது.

மாயாவதி, அகிலேஷ் - 2019 நாடாளுமன்ற தேர்தலில் இணைந்த இரு துருவங்கள்:

2019இல் பாஜக, அப்னாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. வரலாற்றில் முதன்முறையாக உத்தரப்பிரதேச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து “மகாகத்பந்தன்’ என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன, ராஷ்டிரிய லோக் தளமும் இக்கூட்டணியில் இருந்தது. மற்றொரு திருப்பமாக காங்கிரஸ் இக்கூட்டணியில் சேர்க்கப்படவில்லை, அதனால் காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையே ஆரம்பம் முதலே இணக்கமின்றியே இருந்ததால் உத்தரப்பிரதேச மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை. அதனால் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 64 இடங்களிலும், பகுஜன் சமாஜ் – 10 இடங்களிலும், சமாஜ்வாதி – 5 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலியில் வென்றார், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பாஜகவிடம் தோற்றார்.

2022க்கான வியூகங்கள் என்ன?

அசுரபலத்துடன் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை தக்கவைப்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் மீது அக்கட்சியின் தேசிய தலைமைக்கும், மாநில பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் சில அதிருப்திகள் இருந்தது. அவையெல்லாம் சரிக்கட்டப்பட்டு இப்போது பாஜக முழுவீச்சில் களத்தில் உள்ளது. தற்போது வெளிவந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியை உற்சாகத்தில் வைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் வெல்வது என்பது இந்தியாவின் மினி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி என்றே சொல்லலாம், எனவே பாஜக இதை கெளரவ பிரச்னையாகவே பார்க்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த சாமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த முறை எப்படியாவது வெற்றிபெற முனைப்புகாட்டி வருகிறார். மாநிலத்திலும் விவசாயிகள் பிரச்னை, 3 வேளாண்சட்ட எதிர்ப்பு, ஹத்ராஸ் சம்பவம், கொரோனா நெருக்கடி என பாஜகவுக்கு எதிரான மனநிலை பரவலாக உள்ளது, இதனை தனக்கு சாதகமாக்கவேண்டும் என்று அகிலேஷ் நினைக்கிறார், அதற்காக கடுமையாக உழைத்தும் வருகிறார்.

உ.பியின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தெரியவில்லை,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இணைந்தது, ஓரளவு பலனளித்தது, ஆனால் அதன்பின்னர் இரு கட்சிகளுக்குமிடையே இணக்கமான உறவு இல்லை. இந்த முறை இரு கட்சிகளும் இணைந்தால் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ஆனால் மாயாவதி தனித்து நிற்கும் எண்ணத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்த பிரியங்கா காந்தி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றிவருகிறார். அதனால், கடந்த சட்டமன்ற தேர்தலைப்போலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதியுடன் கூட்டணிவைக்குமா அல்லது நாடாளுமன்ற தேர்தலைப்போல தனித்து நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது. தேர்தல் நெருங்க, நெருக்க உத்தரப்பிரதேச அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com